Monday, November 23, 2009

புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும்

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது.

இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தைத் தப்பிப் பிழைக்க விடுவதில்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சக்திகள் விடாது முயற்சிப்பதை அறிய முடிகிறது. இயக்கம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொடர் சவால்களில் மிகப் பிந்தியதும் மிகவும் பாரதூரமான விளைவுகளைத் தரக்கூடியதுமான சிக்கல்தான் களத்திலிருந்து தளபதி ராம், நகுலன் போன்றோர் வெளியிடுவதாக வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள்.

இப்போது ராம், நகுலன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் அல்லது அவர்கள் வெளியிடச் சொன்னதாகச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் தனிப்பட்டவர்களோடு செய்து கொள்ளும் உரையாடல்களும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. சிலநாட்களின் முன்னர் குறிப்பிட்ட தளபதிகளும் பொறுப்பாளர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாமிலிருந்தவாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஓர் அறிக்கை மறுபுறத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

இறுதியாக தளபதி ராமினால் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் பொறுப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சாடி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி, சொத்துக்கள் என்பன பேசப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமெனவும், தற்போது தாயகத்திலுள்ள போராளிகள் தொடர்பாகவோ, கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாகவோ, முகாம்களிலிலுள்ள மக்கள் தொடர்பாகவோ அக்கறையற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களில் சில தமிழ்மக்களிடமும் உள்ள அபிப்பிராயங்களே. இதனால் மிக இலகுவாக இவை தமிழ்மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்குழுவுக்கும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் குறைக்க வழிசெய்யும் நிலையிலுள்ளன. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக்கவனமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஒருவகையில் இந்த அடியை வாங்க புலிகள் தகுதியானவர்களே. மறுபுறத்தில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தளதிகளான இராம், நகுலன் உட்பட்டோர் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியமை ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை மக்களிடம் மறைத்து இவ்வளவு நாளும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தளபதி ராம் அனுப்பிய அவரின் தனிப்பட்ட அறிக்கையைக் கூட செயற்குழுவின் சார்பில் பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். தளபதி ராமோடு தொலைத் தொடர்பு வழியான தொடர்பினைக் கொண்டிருந்தார்கள்.

தமது பிடியிலிருந்த ராமையும் நகுலனையும் இன்னும் சில முக்கிய பொறுப்பாளர்களையும் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத் தரப்பு எஞ்சிய புலிகள் அமைப்பின் செயற்குழுவோடும் செயற்பாட்டாளர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் (கே.பி யின் கைதுக்குப் பின்னர்) இவைகள் தெரிந்தும்கூட தமக்கு எதுவும் தெரியாதது போல புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்கத்தின் சொத்துக்கள், நிதி வழங்கல் வழிமுறைகள், செயற்பாட்டாளர்கள் பற்றி சாடைமாடையாகக் கதைபிடுங்க அவர்களும், அத்தருணங்களில் இலாவகமாகத் தப்பி இவர்களுமென இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இவ்வளவு காலம் நீண்டிருந்ததே ஆச்சரியம்தான்.

இப்போது மாவீரர் நாளையொட்டி இந்தக் கண்ணாமுச்சி விளையாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களுக்கான புலிகளின் மாவீரர்நாள் செய்தி ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அவ்வறிக்கையில் சொல்லப்படும் விடயங்களில் தமது நோக்கத்தைத் திணிக்க முயன்று தோற்றுப் போன நிலையில் சிறிலங்கா அரசதரப்பு தனது தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதன்படி மாவீரர் நாளுக்கான உரை வழமைபோல் இடம்பெறும் என்ற அறிவிப்பு தளபதி ராமின் பெயரால் நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழுவால் விடுக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் எச்சரிக்கையடைந்து கொண்டன. சில ஊடகங்கள் மட்டும் அதை வெளியிட்டு, பின்னர் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க அவ்வறிக்கையை நிறுத்திக் கொண்டன.

இனிமேலும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர முடியாத நிலையில்தான் புலிகள் இயக்கம் உண்மையை ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அதை சில ஊடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்ததைப் போல் மறுதரப்பிலிருந்து உணர்ச்சிமயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலில் இராணுவ, புவியியல் நிலைமைகளைக் கொண்டு சிலவற்றை ஊகிக்க முற்படுவோம்.

மே மாதம் 18 ஆம் நாளோடு வன்னி முழுவதும் சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே தளபதி ராம், நகுலன் ஆகியோரோடு சில நூறு போராளிகள் அம்பாறையை மையமாக வைத்துச் செயற்பட்டு வந்தார்கள். அம்பாறையில் இருந்த புலிகளின் இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க சிறிலங்கா அரசபடை தன்னாலான முயற்சிகளை எடுத்தது. கஞ்சிக் குடிச்சாறு வனப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டைகளை நடத்தியதும், அங்கே பல சண்டைகள் நடந்ததும் நாமறிந்ததே.

இந்நிலையில் வன்னிப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர் மிகப்பெரிய ஆளணிவளத்தோடிருந்த சிறிலங்கா இராணுவம் தனது அடுத்த நடவடிக்கையாக கிழக்கின் காடுகளில் இருக்கும் தளபதிகளையும் போராளிகளையும்தான் வேட்டையாடியிருக்கும். வன்னியில் உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்தபோதே தனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி வளத்தோடு அம்பாறைக் காடுகளில் தேடுதல் வேட்டையிலீடுபட்ட அரசபடை, பின்னர் அப்படியெதுவும் செய்யாது பேசாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியின் அழிவுக்குப்பின்னர் அம்பாறைக் காடுகளில் சண்டைகள் நடந்ததாக இருதரப்பிலிருந்தும் தகவல்களில்லை. சுமார் ஆறுமாதகாலமாக தளபதி ராமையும் ஏனையவர்களையும் செயற்பட விட்டுக்கொண்டு அரசபடை பேசாமலிருந்தது என்பது நம்புவதற்குக் கடினமே.

இதே காரணத்தை வன்னியிலும் பொருத்திப் பார்த்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும். வன்னிக் களத்திலே தலைவரோ முக்கிய தளபதி யாரேனுமோ இறக்காமல் தப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கோ காடுகளுள்தான் மறைந்திருக்கிறார்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சிறிலங்கா அரசபடை இவ்வளவு காலமும் பேசாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தளபதிகளல்லாதவர்களைக் கொண்ட மிகச் சிறு அணிகள் சிலவேளை தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டேயன்றி வேறு சாத்தியங்களில்லை. இந்திய இராணுவக் காலப்பகுதியை உதாரணப்படுத்தும் காலம் இதுவன்று. சிறிலங்கா அரசபடையினரின் ஆட்பலம், நவீன வசதிகளைக் கொண்ட நுட்பப் பலம் என்பன இன்றைய நிலையில் மிகமிக உயர்ந்த நிலையிலேயே உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மேற்படிச் சந்தேகம் இப்போதன்று, முன்பே விடயம் தெரிந்தவர்களால் கதைக்கப்பட்டதுதான். காடுகளில் சண்டை நடப்பதாகத் தன்னும் செய்திகளைக் கசிய விடுவதன் மூலம் தமது சூழ்ச்சிக்கான நம்பகத்தன்மையைப் பேண அரசு முயற்சிக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை எங்கள் மேல்!

சரி, இனி தற்கால விடயத்துக்கு வருவோம்.
ராமின் பெயரால் வெளியிடப்பட்ட, வெளியிடப்படும் அறிக்கை பலரிடையே சலனத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது வெளிப்படை. முன்னாள் இயக்க உறுப்பினர்களாகவும் தற்போதைய செயற்பாட்டாளராகவுமுள்ளவர்கள் கூட இவ்வறிக்கையை நம்பத் தலைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையே. பதிவர் சாத்திரியும் அவர்களுள் ஒருவர். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பலவற்றை நாமும் பேசுகிறோம்தான். அதற்காக தவறான இடத்திலிருந்து வருமோர் அறிக்கைக்கு நாம் ஆதரவு வழங்கி எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகாமலிருப்பது முக்கியமானது. அதுவும், இதற்கு முந்திய அறிக்கையில், மாவீரர் தினத்தில் கொள்கை விளக்க அறிக்கை வெளிவரும் என்றுகூடப் போடாமல், 'உரை' நிகழ்த்தப்படும் என்று எழுதப்பட்ட பின்னரும் அவ்வறிக்கையை நம்புவது ஏனோ தெரியவில்லை. தலைவரின் இடத்திலிருந்துகொண்டு உரை நிகழ்த்தக்கூடியவராகத் தன்னைக் கருதிக் கொள்பவரில்லை ராம் என்பது அவரையறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொன்று வந்தால் மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த கேள்வி.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமாகவும், நேர்மையாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ இழப்பென்பது திடீரென ஏற்பட்ட ஒன்றன்று. அதற்கான அத்திவாரம் முன்பே போடப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடும் திறமையோடு எதிரியால் நகர்த்தப்பட்ட காய்களும், அவற்றை முறியடிக்கத் தவறிய எமது தவறும் முக்கியமானவை. வன்னியின் வீழ்ச்சிக்கு முன்பே எமக்கான ஆப்பை இறுக்கிவிட்ட எதிரியின் நகர்வுகள், அதில் பகடைக்காயாக்கப்பட்ட எமது போராளிகள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிட வேண்டும். நேர்மையாகவும் தீவிரமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த தளபதி ராம் போன்றவர்கள் எவ்வாறு சூழ்ச்சியின் வலையில் சிக்கவைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள், ஏனையவர்கள் எப்படி பிடித்துக் கொடுக்கப்பட்டார்கள், முழுவிருப்போது எதிரியியோடு இணைந்து பணியாற்றிய துரோகிகள் யார் என்பவனவற்றையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டிய நேரமிது. இனியும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேலைக்குதவாது.

எமது ஈழவிடுதலைப் போராட்டம் இனி எப்படிப் போகுமென்பது தெரியவில்லை. அதை ஒற்றைமாடாக இழுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் என்ன கதியாகுமென்று தெரியவில்லை. ஆனால் (குறைந்தபட்சம்) அவ்வியக்கத்துக்கு ஒரு பொறுப்புண்டு. நடந்ததைச் சொல்லுங்கள். புலனாய்வுப் பகுதியில் எதிரியை முறியடிப்பதில் தோற்றுவிட்டோம். அனால் என்ன நடந்ததென்பதையாவது மறைக்காமல் சொல்வது இயக்கத்தின் கடமை.

உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?

எமது இயக்கத்தின் மீதான எதிரியின் சூழ்ச்சித் திட்டங்களும், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும், அதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள், பலிக்கடா ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமடங்கிய விரிந்த அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்.

Labels: , , ,


Sunday, August 09, 2009

பத்மநாதன் கைதுக்கு யார் காரணம்?

கடந்த 05-08-2009 அன்று கே.பி எனப்படும் செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு பெரும் பின்னடைவு இது.

நீண்டகாலம் ஆயுதவழியில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை கடந்த மேமாதம் அழிக்கப்பட்டதோடு அவ்வியக்கம் தளத்தில் செயலிழந்தது. ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்ற அறிவிப்போடு அவ்வியக்கம் தமது ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டது.

இந்நிலையில் கே.பியைத் தலைமைச் செயலராகக் கொண்டு வன்முறையற்ற வழியில் தொடர்ந்தும் செயற்படும் நிலைப்பாட்டை புலிகள் அமைப்பு எடுத்தது. இது புலத்திற் செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினராலும், தொடர்ந்தும் களத்திலிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தொடக்கத்தில் மிகச்சிலரால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோதும்கூட அவை சரிப்படுத்தப்பட்டு அவ்வியக்கம் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கத்துக்கு மட்டுமன்றி, அவ்வியக்கத்தைச் சார்ந்த தமிழ்மக்களும் பேரதிர்ச்சியே.

இந்த நிலைமைக்கு யார் காரணம்?

கே.பியின் அதிகரித்த நகர்வுகள், பகிரங்கமான நடமாட்டங்கள், நேர்காணல்கள், ஏராளமான சந்திப்புக்கள் என்பவை அவருக்கு ஆபத்தானவையாக அமைந்தன. ஆனால் அவர் அப்படிச் செயற்பட வேண்டி வந்ததற்கான காரணகர்த்தாக்கள் வேறுயாருமல்ல, நாம்தாம்.

கே.பி மீதான அவதூறுகள், வசைபாடல்கள், கயமைத்தனமான விமர்சனங்களை நோக்கினால் அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய காரணிகளை அறியலாம்.
'நிழல் மனிதர்', 'அனாமதேயப் பேர்வழி' போன்ற சொற்களால் அவர் குறிப்பிடப்பட்டார். அவரது மறைப்புத்தன்மையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரது தலைமையை எதிர்க்கச் சிலர் கிளம்பினர். அது படிப்படியாகக் குறைந்தபோதும் இன்றுவரை அந்த விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாத இவரா எமக்குத் தலைமை என ஒரு கூட்டம் கிளம்பியது. இதைவிட, மக்களோடு தொடர்பிலில்லாத மர்ம மனிதர் அவர், எப்படி இவரால் ஒழுங்காகக் செயற்பட முடியுமென்ற விமர்சனம் வைக்கப்பட்டது. கே.பிக்கான ஒத்துழைப்பு சரியாக வழங்கப்படவில்லை. வீம்புக்காக அவரை எதிர்த்து நின்ற கூட்டம் தொடர்ச்சியான அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

இவ்வளவும் புலிகள் இயக்க உறுப்பினர்களால் செய்யப்பட்டவையல்ல. (ஆம், புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் சிலர் முரண்பட்டது உண்மையே! அவர்களின் எதிர்ப்பில் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. அதைவிட அவர்களுக்கு அந்த அருகதை இருந்தது. இறுதியில் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள்.) புலிகள் அமைப்பின் உறுப்பினரல்லாத, ஆனால் தாம்தான் இயக்கம் என்ற மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த நபர்கள்தாம் இதில் முக்கியமானவர்கள்.
அவர்கள் "பலர்" வியாபாரிகளாயிருந்தார்கள், ஊடகவியலாளராய் இருந்தார்கள், இராணுவ /அரசியல் ஆய்வு என்ற பேரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பவர்களாய் இருந்தார்கள், இயக்கம் தனது செயற்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திய மக்கள் அமைப்புக்களில் அங்கத்தவராய் அல்லது பொறுப்பாளராய் இருந்தார்கள், யுத்தநிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குப் போய் நாலு புகைப்படம் பிடித்துக் கொண்டு வந்தவர்களாய் இருந்தார்கள், பொறுப்புக்காகவும் நாலுபேரை மேய்க்கும் மனமகிழ்ச்சிக்காகவும் ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்களாய் இருந்தார்கள்.
இவர்கள் தமக்குத் தெரிந்த நாலுபேரையும், பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் வைத்தே இயக்கத்தை அறிந்திருந்தார்கள். கே.பி ஏதோ இவ்வளவுநாளும் ரொட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரெனத் தலைமைக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

வேறு "சிலர்" உண்மையில் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் அயோக்கியத்தனமான காரணங்களால் கே.பியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நபர்களின் திருகுதாளங்களால் மக்கள் குழப்பமடைந்தார்கள். கே.பிக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவர் தனது கூண்டுக்குள்ளிருந்து வெளிவர வேண்டியிருந்தது. மர்ம மனிதர், நிழல் மனிதர், அனாமதேயப் பேர்வழி போன்ற வசைகளை எதிர்கொள்ள அவர் ஓரளவு வெளிப்படையாகச் செயற்பட வேண்டியிருந்தது; ஊடகங்களோடு உரையாட வேண்டியிருந்தது; பலரோடு நேரடிச் சந்திப்புக்களைச் செய்ய வேண்டியிருந்தது. குழப்ப நிலையிலிருந்த பல செயற்பாட்டாளரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்ததன் மூலமே அவர் பல சிக்கல்களைத் தீர்த்து முன்னேறினார். செயற்பாட்டு மந்தநிலையைக் களைய தானே நேர்நின்று செயற்பட வேண்டுமெனத் தீர்மானித்தார்.

தான் யாரென்பதையும் தானொரு முக்கியமானவர் என்பதையும் தானே சொல்ல வேண்டிய அவலநிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். மிகச்சிலரைத் தவிர எல்லோராலும் இது வோறோர் ஆள் என்று இதுவரை காலமும் இனங்கண்டுகொண்டிருந்த புகைப்படங்களில் நிற்பது தானேதான் என்ற உண்மையை அவரே புகைப்படங்களை வெளியிட்டுச் சொல்ல வேண்டி வந்தது. (காட்டுக்குள் பாலா அண்ணை, சங்கர் அண்ணை, தலைவரோடு நிற்பது மு.வே.யோ வாஞ்சிநாதன் என்பதாகவே- கே.பியையும் வாஞ்சிநாதனையும் தெரிந்தவர்களைத் தவிர்த்து- பெரும்பாலானவர்களால் இதுவரை காலமும் நினைக்கப்பட்டு வந்தது.)

இவ்வாறான செயற்பாடுகள் தனது பாதுகாப்புக்குப் பாதகமென்பதை அவர் நன்கு அறிந்தேயிருந்தார். ஆயினும் அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து எச்சரித்தவர்களிடம், தான் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதை விசனத்தோடு குறிப்பிட்டுத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டார். தனது இயலாத உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இறுதியில் அவரும் மற்றவர்களும் பயந்தது போலவே மாட்டுப்பட்டுப் போனார்.

அவரை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை சுடுமென்று தெரியவில்லை. பலருக்கு இதுவொரு விடயமேயன்று. மூன்றாந்தரப்பாக நின்று 'அப்பிடியாம், இப்பிடியாம்' என்று விண்ணாணம் பேசிக்கொண்டு அடுத்த 'மேய்ப்பு'க்குக் கிளம்பிவிடுவார்கள்.

வழிநடத்துபவருக்கான ஆபத்தையும் அவரின் மறைப்புத்தன்மைக்கான தேவையையும் நன்கு அறிந்திருந்தும்கூட அதைக்கொண்டே அவரைச் சீண்டி மாட்டுப்பட வைத்தவர்கள் கொஞ்சநேரம் கண்களை மூடி யோசிப்பார்களாக.


===============
*இக்கட்டுரையில் கே.பி என்ற பெயர் மூலமே திரு. பத்மநாதன் குறிப்பிடப்படுவது தற்செயலானதன்று. அப்பெயருக்கான வலு உறைக்க வேண்டும். ஈழப்போராட்டத்தில் இராணுவ வெற்றிகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அழப்பரியது. அப்பங்களிப்புக்கள் யாவும் கே.பி என்ற பெயரூடாகவே சாத்தியமாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனால் இன்று அதே புலத்தில்தான் கே.பி பந்தாடப்பட்டார்.

Labels: , , , , ,


Sunday, May 24, 2009

முதல்வர் கருணாநிதியின் ஆதரவுப் பதிவாளர்களுக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக வலைப்பதிவுலகில் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட லக்கிலுக், முத்து தமிழினி உட்பட்ட வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களிடம் "முதலும்" கடைசியுமாக நானும் என்னைச் சார்ந்தவர்களும் வைக்கும் ஒரு வேண்டுகோள் இது.

தயவு செய்து பிரபாகரனுக்கான கவிதையை முதல்வர் கருணாநிதி எழுதாமற் பார்த்துக் கொள்ளுங்கள்.

கவிப்பேரரசர்களும் எழுதாமலிருப்பது விரும்பத் தக்கது. ஏன் எவருமே ஒப்பாரி வைக்காமலிருப்பது நன்று. ஆனால் எமது குறைந்தபட்ச விருப்பமாகவிருப்பது மேற்கூறிய வேண்டுகோளே.

-----------------------------------

Thursday, September 27, 2007

கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்

இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.

பின்னணி

தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது.

1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.

முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.

இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.

1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். (ஆனால் யாரோ கண்டி தலதா மாளிகைக்கு வெடிகுண்டுப் பாரவூர்தியை அனுப்பிவிட்டார்கள்) அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.

கிளிநொச்சி மீட்பு

1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் பதினோராவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து 15 கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).
ஆனையிறவையும் கிளிநொச்சிப் படைத்தளத்தையும் ஊடறுத்து பரந்தனில் நிலைகொண்டிருந்த புலியணியைத் தாண்டி கிளிநொச்சியில் எஞ்சியிருந்த சிங்களப்படைகள் ஓட்டம் பிடித்தன. ஆடுமாடுகள் பட்டிவிட்டு ஓடுவதுபோல் நூற்றுக்கணக்கில் கும்பலாக ஓடித்தப்பிய படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சில வீரவரலாறுகள் புலிகளால் எழுதப்பட்டன.

புலிகளின் மகளிர் படையணியொன்றின் தளபதியாக களத்தில் நின்ற லெப்.கேணல் செல்வி, எறிகணைகளை எதிரிகளுக்கிடையில் வீழ்த்த ஆள்கூறுகளையும் திருத்தங்களையும் பீரங்கிப்டையணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். அதில் கொல்லப்பட்டவர்கள் போக மிகுதி இராணுவத்தினர் செல்வியையும் தாண்டி ஆனையிறவு நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
துப்பாக்கியால் சண்டைபிடிக்க முடியாதளவுக்கு கொத்துக் கொத்தாக இராணுவத்தினர்.
செல்வியின் பீரங்கிப்படைக்கான அறிவுறுத்தல் இப்படியாக இருந்தது.

"என்னைச்சுத்தி ஆமிதான் நிக்கிறான். என்னால இனி ஒண்டும் செய்ய ஏலாது. என்னைப்பற்றிக் கவலைப்படாமல் நான் நிக்கிற இடத்துக்கு செறிவா குத்துங்கோ...."

அச்சமரில் லெப்.கேணல் செல்வி வீரச்சாவடைந்திருந்தார்.

இதே போன்றதொரு சம்பவம் மீண்டும் 11.08.2006 அன்று யாழ்ப்பாணம் மீது புலிகளால் நடத்தப்பட்ட சமரிலும் நடந்தது.


ஓயாத அலைகள் -2 சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.

புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்காககக் களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவோர் மீள்பதிவு
_____________________________________________

Labels: , , , ,


Wednesday, September 26, 2007

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.


கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,
"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.
மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?
மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.

ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.


பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.

உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.

அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.
என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.


திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'


இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?

265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்?

எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!
காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.

பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?

அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.

திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்? அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

----------------------------
பட உதவி: அருச்சுனா.
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


திலீபனுடன் மூன்றாம் நாள் -17-09-1987

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது. முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது. நாக்கும் வறண்டுபோயிருந்தது. இந்த நிலையில் அவரின் பற்களைச் சுத்தம் செய்ய முடியாது. எதற்கும் அவரின் விருப்பத்தைக் கேட்டுவிடுவோமே என்று அவரைப் பார்த்துக் கேட்கிறேன்.

"பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?"
"இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்."
கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை.
"வெளிக்குப் போகேல்லையோ?"
என்று மெதுவாகக் கேட்கிறேன்.
"போகவேணும் போலதான் இருக்கு."
"சரி கீழே இறங்கி வாருங்கோ" என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.

"வேண்டாம் விடுங்கோ......நானே வருகின்றேன்" என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்...
மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.
மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.
5 நிமிடம்......
10 நிமிடம்......
15 நிமிடம்......
20 நிமிடம்......
நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். "கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…" என்று அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.


கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?
இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான், அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.
"என்ன பகிடியா பண்ணுறீங்க?...... ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான். பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற கேட்டீங்க?"…
என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.
"இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு…… இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……"
என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது. அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்
நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.

திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, "தமிழ் இனத்தின் பிரதிநிதி" என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது. தாய்க்குலம் - திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத் தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.

ஆம் !
அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின் போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின் மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.
வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள் மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. "உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!" என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
முரளியும் - நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.
"திலீபன் அழைப்பது சாவையா? - இந்தசின்ன வயதில் இது தேவையா?"

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:
"தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் தமிழ் இனத்துக்கே சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல. இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்."

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன். தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.
"இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்." அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.

திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை அதிகாரித்துக் கொண்டே வந்தது.
பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.

செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர். 17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார். வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும் தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.
அவரின் நாடித்துடிப்பு :- 11,
சுவாசம் - 24.

பயணம் தொடரும்........
-----------------------------------------------------
படஉதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Tuesday, September 25, 2007

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. கோமா வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில் ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.
"சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?" என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்? அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம். அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்? மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர். ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.
இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.
அதேபோல் திருக்கோணமலையிலும் "கிருபா" என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை, முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ?டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ?காந்தியவாதி? என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் தமிழர் நலம் காப்பதுஎன்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?
ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு ? திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் தமிழீழத்தைப் பிரித்துத் தா என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை.
நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் - கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் 'நிதர்சனம்' தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.
அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

ஒ! மரணித்த வீரனே!
உன்ஆயுதங்களை எனக்குத் தா
உன்சீருடைகளை எனக்குத் தா
உன்பாதணிகளை எனக்குத் தா
(ஓ?. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.
அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

-------------------------------------------
பயணம் தொடரும்........

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Monday, September 24, 2007

திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987

பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.


அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் - உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?

இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

அப்படியிருக்க........... கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த "மனிதன்" இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..
நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?
அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

"நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…"

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.
கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த 'பண்டிதர்'.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் " அன்பு"

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?
இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.
நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

'திலீபன்' என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்."மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பயணம் தொடரும்........

--------------------------------------------------------
பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]